வெஃகாமை

அறத்துப்பால் / இல்லறவியல் -- அதிகாரம் 18

குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door.

மணக்குடவர்

நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

பரிமேலழகர்

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)

மு.வரதராசனார்

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

கலைஞர் மு.கருணாநிதி

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா

பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

குறள் 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing.

மணக்குடவர்

தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.

பரிமேலழகர்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)

மு.வரதராசனார்

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

கலைஞர் மு.கருணாநிதி

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.

சாலமன் பாப்பையா

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

குறள் 173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire.

மணக்குடவர்

சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

பரிமேலழகர்

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். [பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]

மு.வரதராசனார்

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

கலைஞர் மு.கருணாநிதி

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.

சாலமன் பாப்பையா

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

குறள் 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need.

மணக்குடவர்

வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.

பரிமேலழகர்

இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)

மு.வரதராசனார்

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

கலைஞர் மு.கருணாநிதி

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.

சாலமன் பாப்பையா

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

குறள் 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn?

மணக்குடவர்

நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

பரிமேலழகர்

அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)

மு.வரதராசனார்

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

கலைஞர் மு.கருணாநிதி

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

சாலமன் பாப்பையா

பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்ற பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?

குறள் 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong.

மணக்குடவர்

அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.

பரிமேலழகர்

அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)

மு.வரதராசனார்

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

கலைஞர் மு.கருணாநிதி

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

சாலமன் பாப்பையா

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

குறள் 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.

மணக்குடவர்

பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.

பரிமேலழகர்

வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)

மு.வரதராசனார்

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

சாலமன் பாப்பையா

பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

குறள் 178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine!.

மணக்குடவர்

செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.

பரிமேலழகர்

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)

மு.வரதராசனார்

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

குறள் 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed.

மணக்குடவர்

அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.

பரிமேலழகர்

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)

மு.வரதராசனார்

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

கலைஞர் மு.கருணாநிதி

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

சாலமன் பாப்பையா

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

குறள் 180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still.

மணக்குடவர்

விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.

பரிமேலழகர்

எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]

மு.வரதராசனார்

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.

சாலமன் பாப்பையா

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.