அமைச்சு

பொருட்பால் / அமைச்சியல் -- அதிகாரம் 64

குறள் 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு

A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge.

மணக்குடவர்

செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர்

கருவியும் - வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும் - அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும் - அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு - வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.

மு.வரதராசனார்

செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

கலைஞர் மு.கருணாநிதி

உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

குறள் 632

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined.

மணக்குடவர்

அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர்

வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல் - குடிகளைக காத்தலும்; கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு - முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.

மு.வரதராசனார்

அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.

கலைஞர் மு.கருணாநிதி

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

குறள் 633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு

A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

மணக்குடவர்

மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர்

பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான்.

மு.வரதராசனார்

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

கலைஞர் மு.கருணாநிதி

அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

குறள் 634

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு

A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word.

மணக்குடவர்

ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர்

தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான்.

மு.வரதராசனார்

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

கலைஞர் மு.கருணாநிதி

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

குறள் 635

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

The man who virtue knows, has use of wise and pleasant words. With plans for every season apt, in counsel aid affords.

மணக்குடவர்

அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.

பரிமேலழகர்

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம்.

மு.வரதராசனார்

அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

கலைஞர் மு.கருணாநிதி

அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.

சாலமன் பாப்பையா

அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands before.

மணக்குடவர்

மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?

பரிமேலழகர்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?

மு.வரதராசனார்

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?

கலைஞர் மு.கருணாநிதி

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

சாலமன் பாப்பையா

இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?

குறள் 637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act.

மணக்குடவர்

செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க.

பரிமேலழகர்

செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க.

மு.வரதராசனார்

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா

பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

குறள் 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away.

மணக்குடவர்

அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும் அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன்.

பரிமேலழகர்

அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.

மு.வரதராசனார்

அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

சாலமன் பாப்பையா

அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

குறள் 639

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings.

மணக்குடவர்

குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர்.

பரிமேலழகர்

பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர்.

மு.வரதராசனார்

தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

சாலமன் பாப்பையா

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

குறள் 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails.

மணக்குடவர்

அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.

பரிமேலழகர்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார்.

மு.வரதராசனார்

(செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்.

கலைஞர் மு.கருணாநிதி

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

சாலமன் பாப்பையா

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.