நாடு

பொருட்பால் / அரணியல் -- அதிகாரம் 74

குறள் 731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land' .

மணக்குடவர்

தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.

பரிமேலழகர்

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.).

மு.வரதராசனார்

குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

சாலமன் பாப்பையா

குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

குறள் 732

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare.

மணக்குடவர்

பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.

பரிமேலழகர்

பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.).

மு.வரதராசனார்

மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

சாலமன் பாப்பையா

மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

குறள் 733

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land' .

மணக்குடவர்

குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.

பரிமேலழகர்

பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.).

மு.வரதராசனார்

(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

சாலமன் பாப்பையா

போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

குறள் 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.

மணக்குடவர்

மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.

பரிமேலழகர்

உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.).

மு.வரதராசனார்

மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்துவந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

சாலமன் பாப்பையா

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

குறள் 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the 'land'.

மணக்குடவர்

பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.

பரிமேலழகர்

பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.).

மு.வரதராசனார்

பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

கலைஞர் மு.கருணாநிதி

பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.

சாலமன் பாப்பையா

சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.

குறள் 736

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase.

மணக்குடவர்

கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார். இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.

பரிமேலழகர்

கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.

கலைஞர் மு.கருணாநிதி

எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா

பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

குறள் 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence.

மணக்குடவர்

மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

பரிமேலழகர்

இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.

கலைஞர் மு.கருணாநிதி

ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா

ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth.

மணக்குடவர்

நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.

பரிமேலழகர்

பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

கலைஞர் மு.கருணாநிதி

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.

சாலமன் பாப்பையா

நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.

குறள் 739

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought.

மணக்குடவர்

தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.

பரிமேலழகர்

நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.).

மு.வரதராசனார்

முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

கலைஞர் மு.கருணாநிதி

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

சாலமன் பாப்பையா

தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

குறள் 740

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace.

மணக்குடவர்

மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர்

வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.

கலைஞர் மு.கருணாநிதி

நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.

சாலமன் பாப்பையா

மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.