நட்பு

பொருட்பால் / நட்பியல் -- அதிகாரம் 79

குறள் 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

What so hard for men to gain as friendship true? What so sure defence 'gainst all that foe can do?

மணக்குடவர்

நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள?

பரிமேலழகர்

நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?

மு.வரதராசனார்

நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

கலைஞர் மு.கருணாநிதி

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

சாலமன் பாப்பையா

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

குறள் 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

மணக்குடவர்

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் நட்பு.

பரிமேலழகர்

நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம்.

மு.வரதராசனார்

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.

கலைஞர் மு.கருணாநிதி

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

சாலமன் பாப்பையா

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

குறள் 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good.

மணக்குடவர்

படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு.

பரிமேலழகர்

பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும் - நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும்.

மு.வரதராசனார்

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

சாலமன் பாப்பையா

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

குறள் 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு

Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you stray.

மணக்குடவர்

ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.

பரிமேலழகர்

நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.

மு.வரதராசனார்

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

கலைஞர் மு.கருணாநிதி

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

சாலமன் பாப்பையா

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

குறள் 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mind.

மணக்குடவர்

நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும்.

பரிமேலழகர்

புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்.

மு.வரதராசனார்

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

சாலமன் பாப்பையா

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்லை. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near.

மணக்குடவர்

முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.

பரிமேலழகர்

முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.

மு.வரதராசனார்

முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

சாலமன் பாப்பையா

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

குறள் 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.

மணக்குடவர்

நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.

பரிமேலழகர்

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது.

மு.வரதராசனார்

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

சாலமன் பாப்பையா

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay.

மணக்குடவர்

உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.

பரிமேலழகர்

உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது.

மு.வரதராசனார்

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

கலைஞர் மு.கருணாநிதி

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

சாலமன் பாப்பையா

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

குறள் 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may find.

மணக்குடவர்

நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை.

பரிமேலழகர்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை.

மு.வரதராசனார்

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

சாலமன் பாப்பையா

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

குறள் 790

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'.

மணக்குடவர்

இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன்மையோம் என்று பேணிச் சொல்லினும் நட்புவாடும்: ஆதலால் நட்பினைத் தன்னைத்தான் நினைக்குமாறுபோல நினைக்க.

பரிமேலழகர்

இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும்.

மு.வரதராசனார்

'இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்' என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி

நண்பர்கள் ஒருவருக்கொருவர் இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம் என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

சாலமன் பாப்பையா

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.