இகல்

பொருட்பால் / நட்பியல் -- அதிகாரம் 86

குறள் 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing.

மணக்குடவர்

எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.

பரிமேலழகர்

எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர். (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

கலைஞர் மு.கருணாநிதி

மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

குறள் 852

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requite.

மணக்குடவர்

தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

பரிமேலழகர்

பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.).

மு.வரதராசனார்

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.

கலைஞர் மு.கருணாநிதி

வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா

நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

குறள் 853

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won.

மணக்குடவர்

மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.

பரிமேலழகர்

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.).

மு.வரதராசனார்

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால். அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

குறள் 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

Joy of joys abundant grows, When malice dies that woe of woes.

மணக்குடவர்

இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.

பரிமேலழகர்

இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். (துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.).

மு.வரதராசனார்

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.

சாலமன் பாப்பையா

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

குறள் 855

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victory?

மணக்குடவர்

இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.

பரிமேலழகர்

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்? (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால். அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.

சாலமன் பாப்பையா

தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

குறள் 856

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near.

மணக்குடவர்

பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

பரிமேலழகர்

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.).

மு.வரதராசனார்

இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.

கலைஞர் மு.கருணாநிதி

மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

சாலமன் பாப்பையா

பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.

குறள் 857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity.

மணக்குடவர்

மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

பரிமேலழகர்

இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மு.வரதராசனார்

இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி

பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா

மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

குறள் 858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath mastery.

மணக்குடவர்

மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர்

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.).

மு.வரதராசனார்

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

கலைஞர் மு.கருணாநிதி

மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.

சாலமன் பாப்பையா

மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

குறள் 859

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power.

மணக்குடவர்

மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.

பரிமேலழகர்

ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.).

மு.வரதராசனார்

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

கலைஞர் மு.கருணாநிதி

ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.

சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

குறள் 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestow.

மணக்குடவர்

மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.

பரிமேலழகர்

இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.).

மு.வரதராசனார்

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

கலைஞர் மு.கருணாநிதி

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

சாலமன் பாப்பையா

மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.